ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தனது பயிற்சியாளர் குழுவில் மேலும் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, பரஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து விலகியுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
லசித் மலிங்கா மற்றும் பரஸ் மாம்ப்ரே ஆகியோர் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாகவும், கார்ல் ஹாப்கின்சன் களத்தடுப்புப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கான மாற்றுப் பயிற்சியாளர்கள் தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பயிற்சியாளர் குழுவில் தொடரும் மறுசீரமைப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெரிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னர், ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மஹேல ஜயவர்தனவுக்குப் பதிலாக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.
லசித் மலிங்கா 2023 ஒக்டோபரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்ததுடன், 2024 ஐபிஎல் பருவத்திலிருந்து பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
பரஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் 2025ஆம் ஆண்டு பருவத்திற்கு முன்னதாக அணியுடன் இணைந்தனர். இதில் பரஸ் மாம்ப்ரே ஏற்கெனவே 2010 முதல் 2017ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். இது அவருக்கு அணியுடனான இரண்டாவது பயணமாகும்.
மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட நன்றி அறிக்கை!
இந்த மூவரின் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்து மும்பை இந்தியன்ஸ் அணி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
“லசித், பரஸ் மற்றும் கார்ல் ஆகியோர் அணிக்கும், ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கும் வழங்கிய பங்களிப்புகளுக்காக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்களின் அர்ப்பணிப்பு, அவர்கள் உருவாக்கிய உறவுகள் மற்றும் எங்களுடன் இணைந்து உருவாக்கிய நினைவுகள் அனைத்தும் எங்களது பயணத்தின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு பருவங்களாக இறுதிப்போட்டிக்கு முன்னேறாத மும்பை!
ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது.
அந்த அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
எனினும், கடந்த ஆறு ஐபிஎல் பருவங்களாக அந்த அணியால் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முடியவில்லை. 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பத்து அணிகளில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது.
இதன் காரணமாகவே, அடுத்த பருவத்தை முன்னிட்டு பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
ஐபிஎல் 2027 வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ளது. அணிகள் தங்களது வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் விடுவிப்பதற்குமான இறுதித் திகதி நவம்பர் 15ஆம் திகதியாகும்.
மலிங்கா போன்ற அனுபவமிக்க பந்துவீச்சுப் பயிற்சியாளர் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் யாரை நியமிக்கப் போகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.