தென்னாபிரிக்க சகலதுறை வீரரான மிக்கேல் பிரிட்டோரியஸ், 2027ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் பருவத்திலும் சோமர்செட் (Somerset) அணிக்காக விளையாடவுள்ளதாக அந்த அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் சோமர்செட் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்து வரும் பிரிட்டோரியஸ், 2027ஆம் ஆண்டு கோடைகாலப் பருவத்தில் நடைபெறவுள்ள மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிநாட்டு வீரராக விளையாடவுள்ளார்.
கடந்த பருவத்தில் நடைபெற்ற கவுண்டி சம்பியன்ஷிப் தொடரில் சோமர்செட் அணிக்காக 14 போட்டிகளில் 13 போட்டிகளில் விளையாடிய அவர், 28.83 என்ற சராசரியில் 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், இரண்டு அரைச்சதங்களையும் பதிவு செய்தார். இதன் மூலம் அந்தப் பருவத்தில் டிவிஷன் 1 பிரிவில் சோமர்செட் அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும் பங்களிப்பு வழங்கினார்.
ஒட்டுமொத்தமாக சோமர்செட் அணிக்காக அனைத்து வகையான போட்டிகளிலும் இதுவரை 106 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள பிரிட்டோரியஸ், ஏழு அரைச்சதங்களையும் பதிவு செய்துள்ளார். மேலும், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணி மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றதிலும் முக்கிய பங்காற்றியிருந்தார்.
சோமர்செட் அணியுடனான தனது தொடர்ச்சியான பயணம் குறித்து பிரிட்டோரியஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
“சோமர்செட் அணிக்காக விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக அணி நிர்வாகமும் சக வீரர்களும் எனக்கு மிகச் சிறந்த வரவேற்பை வழங்கியுள்ளனர். இந்தச் சிறப்பான அணியின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சோமர்செட் தற்போது எனது குடும்பத்திற்கு இரண்டாவது வீடாக மாறியுள்ளது. அணி நிர்வாகமும் ரசிகர்களும் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். 2025ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தை வென்றது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. 2027ஆம் ஆண்டிலும் மீண்டும் அந்தச் சாதனையை நிகழ்த்துவோம் என நம்புகிறேன்” என்றார்.
இதேவேளை, சோமர்செட் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் அன்டி ஹரி தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டோரியஸ் அணியின் களத்திலும் களத்திற்கு வெளியேயும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் போட்டிகளின் முடிவுகளை மாற்றக்கூடிய திறமையை அவர் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவரது அனுபவமும் திறமையும் 2027ஆம் ஆண்டு பருவத்தில் அணிக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.












Comments (0)
Be the first to share your thoughts.