2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்புப் பட்டியலை இறுதி செய்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நவம்பர் 15ஆம் திகதி இந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான இறுதித் திகதி நவம்பர் 17ஆம் திகதியாக மாற்றப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான IPL வீரர்கள் ஏலம் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் ஒருநாள் மினி ஏலமாக நடைபெறவுள்ளது.
அணிகள் தங்களது தக்கவைப்பு மற்றும் விடுவிப்புப் பட்டியல்களை இறுதி செய்த பின்னர், ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை IPL நிர்வாகம் அணிகளுக்கு அனுப்பி வைக்கும். அதிலிருந்து தங்களுக்குத் தேவையான வீரர்களை அணிகள் தெரிவு செய்ய முடியும்.
மேலும், வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கான பதிவுகளைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு நவம்பர் 23ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அணிகள் மேலதிக வீரர்களைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை நவம்பர் 27ஆம் திகதி வரை முன்வைக்க முடியும். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் மற்றும் ஏலத் தொகுதிகளின் வரிசை டிசம்பர் 3ஆம் திகதி அணிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே இரண்டு வீரர் பரிமாற்றங்கள்!
இதுவரை 2027 IPL தொடருக்கான ஏலத்திற்கு முன்னதாக இரண்டு முக்கிய வீரர் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து ரிஷப் பந்தை மீண்டும் டெல்லி கெபிடல்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பரிமாற்றத்தில் டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்குச் சென்றுள்ளார்.
அதேபோன்று, வேகப்பந்துவீச்சாளர் டி. நடராஜனை டெல்லி கெபிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கியுள்ளது. இதற்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஜீஷான் அன்சாரியை டெல்லி அணி பெற்றுக்கொண்டுள்ளது.
2027 IPL தொடர் எப்போது ஆரம்பமாகும்?
2027ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஆரம்ப மற்றும் இறுதித் திகதிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், 2024ஆம் ஆண்டு அடுத்த மூன்று பருவங்களுக்கான போட்டி அட்டவணைக் காலப்பகுதியை அறிவித்தபோது, 2027ஆம் ஆண்டுக்கான தொடரை மார்ச் 14 முதல் மே 30 வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற BCCI பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர், 2027ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகலாம் எனத் தெரிவித்திருந்தார்.
2028இல் மெகா ஏலம்!
தற்போதைய IPL சுழற்சியில் நடைபெறவுள்ள கடைசி மினி ஏலமாக இது அமையவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2028ஆம் ஆண்டு பருவத்திற்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது.
2028ஆம் ஆண்டு மெகா ஏலத்துடன் IPL தொடரின் அடுத்த ஊடக ஒளிபரப்பு உரிமைக் காலப்பகுதியும் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு IPL தொடரின் ஊடக ஒளிபரப்பு உரிமைகள் சுமார் 48,390.5 கோடி இந்திய ரூபாய்க்கு (சுமார் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, டிசம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள IPL 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைக்கப் போகின்றன, யாரை விடுவிக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.