மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடரின் ஐந்து அணிகளுக்கான பயிற்சியாளர்கள், அணித் தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகள் பட்டியலில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் இர்பான் பதான், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ், இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்ன தில்ஷான், பாகிஸ்தானின் அசார் மஹ்மூத் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் ஐந்து அணிகளின் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அணிகளுக்கான தலைவர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்களின் பெயர்கள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.
ஐந்து அணிகளின் தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விபரம்:
1. கந்தஹார் வோரியர்ஸ்: தலைவர் – ரஷித் கான் | தலைமைப் பயிற்சியாளர் – ரவி போபாரா | வழிகாட்டி – இர்பான் பதான்.
2. அக்செல் யுனைடெட் காபூல்: தலைவர் – அஸ்மத்துல்லா உமர்சாய் | தலைமைப் பயிற்சியாளர் – ஷேன் மெக்டெர்மொட் | வழிகாட்டி – நிகில் சோப்ரா.
3. நங்கர்ஹார் அணி: தலைவர் – ரஹ்மானுல்லா குர்பாஸ் | தலைமைப் பயிற்சியாளர் – டோபி ராட்ஃபோர்ட் | வழிகாட்டி – மார்க் பவுச்சர்.
4. பக்தியா அணி: தலைவர் – ரஹ்மத் ஷா | தலைமைப் பயிற்சியாளர் – அசார் மஹ்மூத் | வழிகாட்டி – வக்கார் யூனிஸ்.
5. பல்க் அணி: தலைவர் – இப்ராஹிம் சத்ரான் | தலைமைப் பயிற்சியாளர் – மிக்கி ஆர்தர் | வழிகாட்டி – திலகரத்ன தில்ஷான்.
இதற்கிடையில், வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக சர்வதேச கிரிக்கெட்டின் பல முன்னணி வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், இலங்கையின் வனிந்து ஹசரங்க, குசல் பெரேரா, சரித் அசலங்க, மேற்கிந்தியத் தீவுகளின் ரொமாரியோ ஷெப்பர்ட், ரோவ்மன் பவல், தென்னாபிரிக்காவின் ரீசா ஹென்ட்ரிக்ஸ், பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், பாகிஸ்தானின் ஃபகர் ஜமான், சைம் அயூப், இமாம் உல் ஹக் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் உள்ளிட்ட பல வீரர்கள் ஏலத்திற்காகப் பதிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர்களான ரஷித் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் அணிகளின் தலைவர்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்திற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,500 வீரர்கள் ஆரம்பத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதிலிருந்து 462 வீரர்கள் இறுதியாக ஏலத்திற்கான பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு அணியிலும் 19 வீரர்கள் இடம்பெறுவதுடன், குறைந்தபட்சம் 12 ஆப்கானிஸ்தான் அல்லது உள்ளூர் வீரர்களும், அதிகபட்சம் 7 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் வீரர்களின் சம்பளத்திற்காக 725,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த 2018ஆம் ஆண்டிலும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கை ஆரம்பித்திருந்தது. ஐந்து அணிகள் பங்கேற்ற அந்தத் தொடரில் கிறிஸ் கெயில், பிரெண்டன் மெக்கல்லம், ஷஹீத் அப்ரிடி போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் விளையாடியிருந்தனர். எனினும், வீரர்களுக்கான கொடுப்பனவு பிரச்சினைகள் மற்றும் தொடரின் நம்பகத்தன்மை தொடர்பான சர்ச்சைகள் காரணமாக ஒரேயொரு பருவத்துடன் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டது.
இம்முறை புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கின் முதலாவது பருவம் ஆப்கானிஸ்தானில் நடைபெறாது என்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
முன்னாள் சர்வதேச நட்சத்திரங்களின் பங்களிப்புடன் மீண்டும் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக், T20 கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.