இந்திய அணிக்கு எதிரான T20 தொடரை 2-2 எனச் சமநிலையில் முடித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னேற்றம் குறித்து, அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டேரன் சமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அணியின் தன்னம்பிக்கையும், அதிரடியாக விளையாடும் மனப்பான்மையும் மீண்டும் திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனால் தொடர் 2-2 எனச் சமநிலையில் முடிவடைந்தது. இந்த முடிவு இரு அணிகளினதும் ஆட்டத்திறனைப் பிரதிபலிப்பதாக சமி தெரிவித்துள்ளார்.
“தொடர் ஆரம்பித்தபோது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றே பலரும் கருதியிருக்கலாம். ஆனால், அது மற்றவர்களின் கருத்து மட்டுமே. இந்தத் தொடரின் முடிவு எமது அணியின் செயல்பாட்டைச் சரியாகப் பிரதிபலிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் மிகப்பெரிய முன்னேற்றம்!
இதற்கு முன்னர் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக மூன்று இருதரப்பு T20 தொடர்களில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அவை அனைத்திலும் தோல்வியடைந்திருந்தது. அந்தத் தொடர்களில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால், இம்முறை இந்திய அணிக்கு கடுமையான போட்டியை வழங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடரைச் சமநிலையில் முடித்துள்ளது. இது தங்களது இலக்குகளை நோக்கிய பயணத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என சமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடரைக் கைப்பற்றியிருக்க வேண்டும் என்பதே தங்களது விருப்பமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், 2023 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற T20 தொடரில் இந்திய அணியை 3-2 என வீழ்த்தியிருந்தமையையும் நினைவுபடுத்தினார்.
மேலும், நடப்புச் சம்பியனான இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே சமமான போட்டியை வழங்கியதுடன், சில துறைகளில் இந்திய அணியைவிடச் சிறப்பாகவும் விளையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நெருக்கடியிலிருந்து மீள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஆதரவு தேவை!
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் களத்திலான முன்னேற்றம், அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் உதவும் என டேரன் சமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சர்வதேச கிரிக்கெட்டின் வருவாய்ப் பகிர்வு முறையில் மாற்றங்களை மேற்கொண்டது. இதன் விளைவாக, இருதரப்புத் தொடர்களின் மூலம் கிடைக்கும் வருவாயை நடத்தும் கிரிக்கெட் சபைகள் பெற்றுக்கொள்ளும் நிலை உருவானது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் கிடைத்த வருவாயை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய மக்கள் தொகையைக் கொண்ட பிராந்தியங்களின் கிரிக்கெட் நிர்வாகங்கள் நிதி ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் டியரிங் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை முக்கிய நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக ஒப்பந்த அடிப்படையில் விளையாடும் சர்வதேச வீரர்களின் சம்பளத்தில் 25 சதவீதக் குறைப்பும் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சமி, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் என்பது அந்தப் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல், உலகக் கிரிக்கெட்டுக்கும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் பல மாதங்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பயிற்சிப் போட்டிகளில் விளையாடி, தங்களது திறமையால் ரசிகர்களை ஈர்த்ததுடன் பலருக்கும் வருவாய் உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா போன்ற முன்னணி அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடுவது, அந்த ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“தன்னம்பிக்கையும் வெற்றி பெறும் மனப்பான்மையும் திரும்பியுள்ளன!”
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான T20 தொடரை வென்றிருந்தது. அதேபோல், 2026 T20 உலகக் கிண்ணத் தொடரிலும் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.
இந்த வெற்றிகரமான பயணத்தின் தொடர்ச்சியாகவே இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அணி சிறப்பாகச் செயல்பட்டதாக சமி தெரிவித்துள்ளார்.
“அணியின் வீரர்கள் அனைவரும் களத்தில் இறங்கி, வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடினர். மிகவும் மகிழ்ச்சியளித்த விடயம் என்னவென்றால், அணியின் பழைய கம்பீரமும் தன்னம்பிக்கையும் மீண்டும் திரும்பியுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரின்போதே இந்த மாற்றம் ஆரம்பித்ததாகக் கூறிய சமி, வீரர்கள் களத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதையும், வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுவதையும் காண முடிந்ததாகத் தெரிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சர்வதேச கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தில் இருப்பதற்குத் தகுதியானது என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், இந்த முன்னேற்றத்தை நிலையான வெற்றிகளாக மாற்றுவதே அடுத்த இலக்கு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராகத் தொடரைச் சமநிலையில் முடித்திருப்பது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு முக்கியமான நம்பிக்கையை அளித்துள்ளது. களத்திலான இந்த முன்னேற்றம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் பெரிய தொடர்களைக் கைப்பற்றுவதுடன், அணியின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.












Comments (0)
Be the first to share your thoughts.