ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகள், உச்ச கோடைகாலத்தில் தங்களுக்கான சர்வதேச போட்டிகளை அதிகரிக்க வேண்டும் என Cricket Australia-விடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய போட்டி அட்டவணை, ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றும், குறிப்பாக இளம் ரசிகர்கள் மற்றும் சிறுமிகள் கிரிக்கெட்டை பின்பற்றுவதில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் வீராங்கனைகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்த கோடைகாலத்தை தொடங்குகிறது. இதன் பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று T20I போட்டிகளில் விளையாடுகிறது. ஆனால், சிட்னியில் நடைபெறும் இந்த மூன்று T20I போட்டிகளும் பள்ளி நாட்களில் நடைபெறுகின்றன.

மேலும், இந்தப் போட்டிகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மகளிர் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் விளையாடுவது 2027 மார்ச் மாதத்தில்தான். தற்போதைய சர்வதேச அட்டவணையின்படி, அடுத்த சில ஆண்டுகளிலும் ஆஸ்திரேலிய பள்ளி விடுமுறை காலங்களில் மகளிர் சர்வதேச கிரிக்கெட் அல்லது WBBL போட்டிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் அனுபவமிக்க விக்கெட் கீப்பர்-பேட்டர் பெத் மூனி, தங்களது போட்டிகளை கோடைகாலத்தின் முக்கிய காலகட்டத்தில் நடத்துவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தவறான நேரத்திலும், பெற்றோருக்கு சிரமமான காலத்திலும் விளையாடுகிறோம். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் T20 போட்டியை பார்க்க குழந்தைகளை பெற்றோர் அழைத்து வருவது கடினம். இது சிறுமிகள் கிரிக்கெட்டில் ஆர்வம் கொள்வதையும் பாதிக்கும்” என மூனி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீராங்கனையான எலிஸ் பெர்ரியும் இதேபோன்ற கவலையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். மகளிர் கிரிக்கெட் அணிக்கு கோடைகாலத்தில் போதுமான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது குறித்து வீராங்கனைகள் நீண்ட காலமாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சொந்த மண்ணில் அதிக போட்டிகளை நடத்த வேண்டும் என்பது வீராங்கனைகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆண்கள் அணியின் போட்டிகளுடன் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்றும், ஆண்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் அதற்கு முன்பாகவோ அல்லது வேறு நேரத்திலோ மகளிர் T20 போட்டிகளை நடத்த முடியும் என்றும் மூனி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் கோடைகாலத்தின் முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் விளையாடுகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாக வேண்டும். நாங்கள் ரசிகர்களுக்கு நெருக்கமான வீராங்கனைகளாக இருக்க விரும்புகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஷெல்லி நிட்ஷ்கேவும், டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் சொந்த மண்ணில் போட்டிகள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அணித்தலைவி சோஃபி மோலினக்ஸ், டிசம்பர் மாதத்தில் சொந்த மண்ணில் போட்டிகள் நடத்தப்பட்டால் அது அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும், இதன் மூலம் மைதானங்களுக்கு அதிக ரசிகர்களை வரவழைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் T20 உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில், அந்த வெற்றியின் momentum-ஐ பயன்படுத்தி மகளிர் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே வீராங்கனைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதனால், எதிர்கால போட்டி அட்டவணையில் டிசம்பர் மற்றும் ஜனவரி போன்ற உச்ச கோடைகால மாதங்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுமா என்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.