ODI உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதத் தயாராகி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர், உலகக்கிண்ணத்திற்கான அணித் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது.
பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆகா கடந்த சில மாதங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில் அணித் தலைவராகச் செயல்பட்ட அவர், அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், மூன்றாவது போட்டிக்கு முன்னதாக நாடு திரும்பவும் அனுப்பப்பட்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் T20I அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதுடன், இலங்கைக்கு எதிரான தொடருக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்த சல்மான் ஆகா, ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் 82 பந்துகளில் சதமடித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
இங்கிலாந்து அணியின் ஜோர்டன் காக்ஸுக்கும் அண்மைக்காலம் முக்கியமானதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது இலக்கத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடிய அவர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லருக்கு ஏற்பட்ட தொடைத் தசைக் காயம் காரணமாக இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பிடித்தார்.
பட்லர் இல்லாத நிலையில், இந்தப் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலும் அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் காக்ஸுக்கு தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் காப்பாளராகவும், அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராகவும் தனது இடத்தை உறுதிப்படுத்துவதே அவரின் இலக்காக இருக்கும்.
இங்கிலாந்து அணிக்குத் திரும்பும் ரஷித், சாம் கரன்!
பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் சாட் பெய்க்கு அறிமுக வாய்ப்பு வழங்கியது. விக்கெட் காப்பாளராகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், துடுப்பாட்டத்தில் அவர் கவனம் ஈர்த்தார். வெற்றிபெற்ற அணிக் கலவையைத் தொடர்ந்து பயன்படுத்த பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஷதாப் கான் மற்றும் சோஃப்யான் மொகீம் ஆகியோர் தொடர்ந்து அணியுடன் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் உத்தேச பதினொருவர்:
பகர் ஸமான், சைம் அயூப், பாபர் அஸாம், சாட் பெய்க் (விக்கெட் காப்பாளர்), சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், அராஃபத் மின்ஹாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி (தலைவர்), ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா.
மறுபுறம், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடாத அடில் ரஷித், தற்போது உடற்தகுதி பெற்று அணிக்குத் திரும்பியுள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சாம் கரனும் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார்.
இந்தத் தொடருக்காக ஜொஃப்ரா ஆர்ச்சர் ஓய்வளிக்கப்பட்டுள்ளார். ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடும். ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத லியாம் டாசன் மற்றும் மசன் கிரேனும் சுழற்பந்துவீச்சுக்கான மாற்றுத் தெரிவுகளாக உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் உத்தேச பதினொருவர்:
டாம் பான்டன், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (தலைவர்), ஜோர்டன் காக்ஸ் (விக்கெட் காப்பாளர்), வில் ஜாக்ஸ், சாம் கரன் அல்லது ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், ஜோஷ் டங், சோனி பேக்கர்.
ஆடுகளம் மற்றும் வானிலை: அதிக ஓட்டங்கள் குவிய வாய்ப்பு!
ராவல்பிண்டி ஆடுகளம் வேகமான துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் இலங்கை அணி 306 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்தும்போது வெற்றியை நெருங்கியிருந்தது. ஆனால், கடைசி வரிசை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இலங்கை அணி இலக்கை எட்டத் தவறியது.
மாலை நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், நாணயச் சுழற்சியில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீசத் தீர்மானிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய புள்ளிவிவரங்கள்!
- 2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின்போது பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
- பாகிஸ்தானில் இங்கிலாந்து கடைசியாக விளையாடிய இருதரப்பு ஒருநாள் தொடர் 2005–06ஆம் ஆண்டில் நடைபெற்றது. அந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 3–2 எனக் கைப்பற்றியது.
- ICC ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து ஆறாவது இடத்திலும் உள்ளன.
- சொந்த மண்ணில் விளையாடிய கடைசி மூன்று ஒருநாள் தொடர்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
- இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடக்க இன்னும் 97 ஓட்டங்கள் மட்டுமே தேவை. இந்த மைல்கல்லை எட்டும் முதல் இங்கிலாந்து வீரராகவும், உலகளவில் 34ஆவது வீரராகவும் அவர் மாற வாய்ப்புள்ளது.
- பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி, ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எட்ட இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை.
உலகக்கிண்ணத் தொடருக்கான தயாரிப்பில் இரு அணிகளும் தங்களது பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பிடும் நிலையில், பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் இந்த மோதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.